Tamilnadu

சென்னை குரோம்பேட்டையில் போலி ஏடிஎம் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை ! 

சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஆனந்த் மணி. கடந்த மாதம் 27 ஆம் தேதி வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தனது டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்பு இரண்டு நாள் கழித்து 29ஆம் தேதி திடீரென ஆனந்த் மணியின் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மூலம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

ஆனால் ஏடிஎம் காடானது குரோம்பேட்டையில் வீட்டில் ஆனந்த் மணியின் கையில் இருக்கும் நிலையில், ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம் களில் பத்தாயிரம் ரூபாய் வீதம் ஐந்து முறை சுவைப் செய்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் மணிக்கு தெரியாமல் வங்கி கணக்கில் பணம் எடுப்பது, அவருக்கு வந்த குறுஞ்செய்தி மூலம் தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து பணம் எடுக்கப்படும் பொழுது வங்கியிலிருந்து ஆனந்த் மணிக்கு அழைப்பு வந்துள்ளது.

ஆற்காடு சாலையில் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது நீங்கள் தானா என வங்கியிலிருந்து கேட்டுள்ளனர். இதற்கு தான் இல்லை என்று தெரிவித்த உடன், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏடிஎம் கார்டை தனியார் வங்கியானது முடக்கியுள்ளது. இந்த வங்கிக் கணக்கானது ,தான் வேலைபார்க்கும் கம்பெனியின் சம்பளம் வங்கி கணக்கு என ஆனந்தன் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேளச்சேரியில் இருக்கும் ,இந்த தனியார் வங்கியில் தான் சம்பளம் வங்கி கணக்கு வைத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் பழைய ஏடிஎம் கார்டை ஒப்படைத்துவிட்டு, நவீன மயமாக்கப்பட்ட சிம் வைத்த ஏடிஎம் கார்டை வங்கியிலிருந்து பெற்றதாகவும் ஆனந்த் மணி தெரிவித்துள்ளார். மேலும் தன் வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களையும், otp , பாஸ்வேர்ட் போன்ற விவரங்களையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனந்த் மணி வங்கிக் கணக்கு வைத்திருந்த தனியார் வங்கியின் மூலம் ஆவணங்கள் மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது ஏற்கனவே ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களில் நூதன கருவியைக் கொண்டு போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பணத்தை கொள்ளையடித்து உள்ளார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை துவங்கி இருக்கின்றனர்