Tamilnadu

தமிழகத்தில் 48 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணிநேரத்தில் புயலாக உருவானால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. எச்சரிக்கையை அடுத்து காரைக்கால் மாவட்டத்தில் கடலோர காவல்துறையுடன் மாவட்ட ஆட்சியரும் பேரிடர் மேலாண் துறையினரும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.