nirmala devi
Tamilnadu

நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றக் கிளை 

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. அவர், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, ஒரு மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவின் அடிப்படையில் நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதுதொடர்பான, வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. சுமார் 200 நாள்களுக்கும் மேலாக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்துவருகிறார். நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபானி உத்தரவிட்டார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறை சார்பில் இரண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ‘அரசு தரப்பு, நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று இன்றும் வலியுறுத்தியது. இப்படி பல்வேறு இடையூறுகள் வந்த பின்னரும், இன்று சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிர்மலா தேவிக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார். மேலும் ‘நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை நிர்மலா தேவி மதித்து நடப்பார். ஜாமின் வழங்குவதற்கு காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நிர்மலா தேவி, வியாழக்கிழமை சிறையிலிருந்து வெளியே வருவார்’ என்று தெரிவித்தார்.