Sports

‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, தொடர்ந்து மிகவும் மதிப்புமிக்க அணியாக தனது இடத்தை தக்க வைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோகே (Houlihan Lokey) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆர்சிபியின் பிராண்ட் மதிப்பு 31.2 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

2025-ம் ஆண்டில் 26.9 கோடி டாலராக இருந்த பிராண்ட் மதிப்பு, 2026-ம் ஆண்டில் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 30 கோடி டாலர் பிராண்ட் மதிப்பை கடந்த முதல் கிரிக்கெட் அணியாகவும் ஆர்சிபி வரலாறு படைத்துள்ளது. கடந்த 2 ஆண்டிலும் தொடர்ச்சியாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ஆர்சிபி அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் தொடரின் மொத்த வணிக மதிப்பு 18.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது ஐபிஎல் தொடரானது, உலக விளையாட்டு சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

4 மாதங்களுக்கு முன்பு பிளாக்ஸ்டோன், போல்ட் வென்சர்ஸ், ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் இணைந்த கூட்டமைப்பு, ஆர்சிபி அணியை 178 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இது அந்த குழுமங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அதேபோல், இந்த பிராண்ட் மதிப்பு பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 26.4 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அந்த அணியின் மதிப்பு 9.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

24.5 கோடி டாலர் பிராண்ட் மதிப்புடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது இடத்தில் உள்ளது. அதன் மதிப்பு 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

24.4 கோடி டாலர் மதிப்புடன் ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது இடத்தை பிடித்துள்ளது. CSK அணியின் பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டைவிட 3.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிராண்ட் மதிப்பு பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 16.8 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் மதிப்பு 9.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

மிட்டல் குடும்பம் மற்றும் அதார் பூனாவாலா இணைந்து சுமார் 165 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கையகப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ், 16.1 கோடி டாலர் பிராண்ட் மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதன் மதிப்பு 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் 15.8 கோடி அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்புடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் மதிப்பு 12.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் 15.7 கோடி டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 15.6 கோடி டாலர் மதிப்புடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

டெல்லி அணியின் மதிப்பு 2.6 சதவீதம் உயர்ந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12.2 கோடி அமெரிக்க டாலர் பிராண்ட் மதிப்புடன் 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாற்றமின்றி தொடர்கிறது.

இதுகுறித்து ஆர்சிபி இணை உரிமையாளரும் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத் தலைவருமான சத்யன் கஜ்வானி கூறுகையில், ”ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் முதலீட்டு செயல்முறைகளில் நாங்கள் நேரடியாக ஈடுபட்டிருந்தோம். இரு அணிகளும் சிறந்த சொத்துகள். ஆனால் ரசிகர்களின் ஈடுபாடு மற்றும் அணியுடனான உணர்வுப்பூர்வமான இணைப்பு என்ற அளவில் ஆர்சிபிக்கு இணையான அணியாக எதுவும் இல்லை” என்றார்.

மிகப்பெரிய வணிகமயமாக மாறியுள்ள ஐபிஎல் தொடர் என்பது, ரசிகர்களுக்கு மட்டுமல்லாது முதலீட்டார்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்பது தான் நிதர்சனம்.\

இருப்பினும், ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதற்கு நிகழ்சாட்சியாகவே இந்திய அணியின் அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள் அமைந்தது.

எப்படியாயினும் ரசிகர்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் ஒரு தொடராக பின்னிபிணைந்து இருக்கும் ஐபிஎல் தொடரை தங்களுக்கான ஒரு பொழுதுபோக்கு தளமாகவே பார்க்கின்றனர்.

Also Read: ‘இந்தியாவில் ஆஷஸ் டெஸ்ட்?.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!’