Sports

மிரட்டிய அர்ஜெண்டினா.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய மெஸ்ஸி.. இங்கிலாந்துக்கு நடந்த அதிர்ச்சி!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டினா, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடைசி நிமிடங்களில் நிகழ்ந்த அதிரடி திருப்பமே போட்டியின் போக்கையே மாற்றியது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் எச்சரிக்கையுடன் விளையாடின. குறிப்பாக இரு அணிகளுமே மிகவும் தெளிவாக டிபென்ஸ் செய்ததால் கோல் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் 0-0 என்ற சமநிலையுடன் இருந்தன.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில், ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஆன்டனி கோர்டன் கோல் அடித்து இங்கிலாந்தை 1-0 என முன்னிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அர்ஜெண்டினாவை கோல் போட விடாமல் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது.

பின்னடைவை சந்தித்த அர்ஜெண்டினா தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. அதன் பலனாக 85-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸியின் துல்லியமான பாஸை என்சோ பெர்னாண்டஸ் சக்திவாய்ந்த ஷாட்டாக மாற்றி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கிச் சென்றபோது, 90+2-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸியின் அசத்தலான உதவிப் பாஸை லவுடாரோ மார்டினஸ் கோலாக மாற்றினார். இந்த கோலே அர்ஜெண்டினாவுக்கு 2-1 என்ற வெற்றியையும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டையும் உறுதி செய்தது.

39 வயதிலும் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களுக்கும் உதவிப் பாஸ் வழங்கி ஆட்டநாயகன் தரத்திலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு சாதனையைப் படைத்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா,தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன்  இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 

முன்னிலை பெற்றிருந்தும் கடைசி நிமிடங்களில் வெற்றியை இழந்த இங்கிலாந்து மீண்டும் ஒரு முறை உலகக் கோப்பை அரையிறுதியில் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Also Read: எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!