Sports

7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!

2026ம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரில் கோப்பையைக் கைப்பற்றி 7 வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஒருநாள் உலகக் கோப்பையில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியா மகளிர் அணி, 2026 டி20 தொடர் முழுவதும் தோல்வியின்றி விளையாடி இறுதிப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்றது. மேலும், இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூலை 05) நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே இளம் வேகப்பந்துவீச்சாளர் லூசி ஹாமில்டன், ஏமி ஜோன்ஸை 6 ரன்களில் வெளியேற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து டேனி வையட்-ஹோட்ஜும், அனபெல் சதர்லண்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், நட் ஸ்கிவர்-பிரண்ட் நிதானமாக விளையாடினார். ஃப்ரெயா கெம்ப் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கான கூட்டணியை அமைத்தனர்.

ஸ்கிவர்-பிரண்ட் 58 ரன்களுடனும், கெம்ப் 44 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீராங்கனைகள் அதிரடியான அடித்தளம் அமைத்தனர். ஜார்ஜியா வோல் வேகமாக ரன்கள் சேர்த்துவிட்டு ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு பெத் மூனி மற்றும் ஃபோபி லிட்ச்ஃபீல்ட் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.

இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அபாரமாக விளையாடிய மூனி 64 ரன்களும், லிட்ச்ஃபீல்ட் 48 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பையை வெல்லாமல் உள்ள இங்கிலாந்து மகளிர் அணிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. தொடர் முழுவதுமே ஒரு தோல்வி கூட சந்திக்காமல், சொந்த மண்ணில் விளையாடிதால் கண்டிப்பாக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது.

ஆனால், உலக மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மீண்டும் தனது வலிமையை நிரூபித்து கோப்பையைக் கைப்பற்றியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!