Sports

“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டியின்றி தேர்வு செய்தது. கம்பீரின் தலைமையின் கீழ் இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை சந்தித்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பை என ஒயிட் பால் போட்டிகளில் மிகச் சிறப்பாக இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆனால், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இதற்கடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியிடமும் 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இப்படி டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இம்முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறலாம். கடைசியாக விராட்கோலி, ரோகித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணி தொடர் வெற்றிகளை குவித்து டெஸ்ட் போட்டிகளில் உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி இப்படி டெஸ்ட் போட்டிகளில் பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருவதற்கு காரணம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் என்றும் அவரைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அணியின் ஆலோசகராக தோனியை கொண்டு வர வேண்டும் என்றும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை. ஆலோசகர் தான் தேவை. ஒரு சகோதரனைப் போல ஆலோசகர் இருக்க வேண்டும். தோனியைப் பொறுத்தவரை வீரர்களிடம் எப்போதும் அழுத்தத்தை காண்பித்தது கிடையாது. ஆனால், கௌதம் கம்பீர் வெற்றி பெறும்போது சிரிப்பதும், தோற்கும் போதும் கோபப்படுவதும் தனது குணநலன்களை அணி வீரர்களிடம் வெளிப்படுத்தி வருகிறார்.

அது நம்முடைய அணிக்கு சரியாக இருக்காது. எனவே தான் கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஆலோசகராக தோனியை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

2026 டி20 உலககோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முழு காரணமும் கம்பீரை சேராது என்றும் வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணம் என்றும் ஸ்ரீசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கம்பீர் மேல் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவ்வப்போது அணியின் செயல்பாடுகள் மூலம் தனது பதிலடியைக் கொடுப்பார். ஆனால், இதுபோன்ற அவ்வப்போதான வெற்றி பலனைக் கொடுக்காது. அணியின் சூழ்நிலைகள் தான் களத்தில் வீரர்களிடையே வெளிப்படும். இருப்பினும் இதிலும் இறுதி முடிவெடுப்பது பிசிசிஐ தான். தற்போது இது குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதம் நடந்து வருகிறது.

Also Read: FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!