Sports

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!

T20 உலகக்கோப்பை தொடரில் நேற்று (பிப்ரவரி 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே வேகமாக ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை வழங்கினர். சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் 24 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஆனாலும், அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நல்ல ஆட்டம் ஆடி 38 ரன்கள் எடுத்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஹர்திக் சிறப்பாக விளையாடி 23 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து திலக் வர்மாவும் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.

257 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும் பின்னர் மெதுவாக ரன்களை சேர்த்தது. ஜிம்பாப்வே அணியின் வீரர் பென்னட் சிறப்பாக விளையாடி 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 97 ரன்கள் குவித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியாததால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்த்து தோல்வியடைந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியில் அதிரடியான அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சில் தடுமாறினர். அடுத்த ஆட்டம் மிகவும் முக்கியமான ஆட்டம் என்பதால் இந்திய அணி பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

மே.இ.தீவுகள் அணியும் வெற்றி பெற போராடும் என்பதால் அடுத்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!