Sports

டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது சூப்பர் 8 கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சுற்றில் முன்னேறிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டு வருகின்றன. ஒவ்வொரு போட்டியும் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் வகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குரூப் 1-ல் நடப்பு சாம்பியனாக விளங்கும் India national cricket team, தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறுபுறம், இருமுறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, தனது தொடக்க ஆட்டத்தில் ஜிம்ப்பாவே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5.350 என்ற ரன் ரேட்டுடன் 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பின்னர் மார்ச் 1-ம் தேதி இந்திய அணியுடன் மோத உள்ளது. இந்தியாவை பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா தற்போது 3.800 நிகர ரன் ரேட்டுடன் 2 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமானால் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகமான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால், 6 புள்ளிகளுடன் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்குள் நுழையும்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கும். இல்லையெனில் இந்தியாவின் அரையிறுதி கேள்விக்குறியாகும்.

ஒருவேளை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தால், அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விடும். அப்படியானால் இந்திய அணியின் நிலைமை மேலும் கடினமாகும்.

மேலும், தென் ஆப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வென்றால், இந்திய அணியின் வாய்ப்பு பெரும்பாலும் நிகர ரன் ரேட்டின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும். தற்போது இந்திய அணியின் நிகர ரன் ரேட் -3.800 ஆக இருப்பதால், சாதரணமாக வெற்றி பெறாமல் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும்.

நாளை (பிப்ரவரி 26) ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி மோதவுள்ள போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சர்மாவின் சொதப்பல் ஆட்டம், ரிங்கு சிங் அணியில் இல்லாதது. மீண்டும் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவாரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நாளை நடைபெறவுள்ள ஆட்டம் தான் பதில் தரும்.

மொத்தத்தில், குரூப் 1-ல் உள்ள அணிகளின் அடுத்தடுத்த முடிவுகளே அரையிறுதி நிலையை தீர்மானிக்க உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் வரும் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Also Read: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?