Sports
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பேட்டிங் விதம் குறித்து இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே கூறிய கருத்து உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணி, இதர நாட்டு கிரிக்கெட் அணிகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்ற பிறகு, இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக, அண்மையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரை இந்திய அணி எந்த சர்வதேச டி20 தொடரிலும் தோற்கவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அசுர பலத்துடன் இருப்பதால், மீண்டும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது.
குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், உலகக் கோப்பை தொடரில் 300 ரன்களை இந்திய அணி சுலபமாக குவிக்கும் என்றும் கருதப்படுகிறது. மற்ற அணிகளுமே இந்திய அணியை பார்த்து வியந்து போய்தான் உள்ளனர்.
கடந்த சில தொடர்களில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 240, 270 போன்ற பெரிய ஸ்கோர்களை எட்டி வருகின்றது. இதுவே மற்ற அணிகள் வியந்து பார்க்க காரணமாக உள்ளது. சில முன்னாள் வீரர்கள் உலகக் கோப்பை குறித்து பேசுகையில், கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இந்திய அணியை தாண்டித்தான் வெல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அணி வீரர் பனுகா ராஜபக்சே, இந்திய அணி பேட்டர்கள் பயன்படுத்தும் பேட்டில் ஒரு வகையான மாய ரப்பர் இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்துதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பேசிய பனுகா ராஜபக்சே, “இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளை மற்ற அணி வீரர்கள் வெளிநாடுகளில் வாங்க முடியாது. அந்த பேட்டுகள் அவர்களுக்காவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது என தோணுகிறது. அதனால்தான் அவர்கள் இவ்வளவு சிறப்பாக விளையாடுகின்றனர். இதுகூட அவர்களது அதிரடிக்கு காரணமாக இருக்கலாம்” என்று கூறி உள்ளார்.
இந்திய வீரர்கள் குறித்து இவர் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், மீண்டும் வேறு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் பனுகா ராஜபக்சே. அதில், “நான் கூறிய கருத்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. இந்திய வீரர்களின் தரத்தை குறிக்கும் வகையிலேயே இது போன்ற கருத்தை கூறினேன்.
இந்திய வீரர்கள் மிகவும் அற்புதமாக விளையாடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது, அவர்கள் குறித்து நான் தவறாக ஏதும் கூறவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஏ குரூப்பில் உள்ள இந்திய அணியும், பி குரூப்பில் உள்ள இலங்கை அணியும் நேரடியாக குரூப் சுற்றில் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை. இரண்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் தான் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, சூப்பர் 8 சுற்றில் இவ்விரு அணிகளும் மோதும் பட்சத்தில் அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“சூரியன் ஒருபோதும் மறையாது திரும்ப உதித்தே தீரும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ரூ.1000 கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” : முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிருக்கு அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்!
-
திராவிட மாடல் அரசின் திட்டங்களை தொடர்ந்த விஜய் : மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு!
-
“குதிரை பேரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது” : த.வெ.க அரசு மீது பி.வில்சன் MP குற்றச்சாட்டு!