Sports

கைகொடுக்காத துபேவின் அதிரடி ஆட்டம்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து!

இந்தியா - நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு பிறகு, நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாடிய ஒரு டி20 போட்டிகளில் கூட வெற்றியைப் பெறவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசியாக நியூசிலாந்து விளையாடிய நிலையில், 6 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இந்தியாவுடன் விளையாடிவரும் டி20 தொடரிலும் முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்த நியூசிலாந்து அணி தற்போது இந்தியவுடனான 4வது டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவான் கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள், டிம் செய்பர்ட் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 16 பந்துகளில் 24 ரன்களை சேர்த்தார். பிறகு, இறுதிக் கட்டத்தில், டேரில் மிட்செல் அபாரமாக செயல்பட்டு 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடித்து 39 ரன்களை எடுத்தார். அணியின் முக்கிய பேட்டர்கள் அதிரடி காட்டியதால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்கார அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்தப்போட்டியில் ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்த சஞ்சு சாம்சன் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுத்து ஆவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த ஷிவம் துபே அதிரடியாக ஆடினார். 23 பந்துகளில் 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார். 15 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.

இருப்பினும் 18.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், "நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் திட்டமிட்டு சோதனை முயற்சியில்தான் 6 பேட்டர்களுடன் களமிறங்கினோம். 200 ரன்களை சேஸ் செய்யும்போது 2-3 விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களின் திறன் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவே இவ்வாறு செய்தோம். டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே இந்த போட்டியில் இடம்பெற வேண்டும் என நினைத்தோம்" என தெரிவித்தார்.

நியூசிலாந்து அணி டி20 தொடரில் வாஷ்அவுட் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், இந்த தோல்வி ரசிகர்களுக்கு சற்று சோகத்தையே கொடுத்தது.

Also Read: ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?