Sports

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?

இந்தியா - நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஜனவரி 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3 போட்டிகளையும் வென்று இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நாளை (ஜனவரி 28) விசாகப்பட்டினத்தில் 4வது டி20 போட்டி நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளையும் வென்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும், நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும். ஏனென்றால், அந்த அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பதால் டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் சிறப்பான பதிலடியாக இருக்கும்.

நடந்து முடிந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. 154 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து சுலபமாக வென்றது இந்திய அணி. இப்போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

ரசிகர்களின் பெரிய விவாதமாக இருப்பது தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் ஆட்டம் தான். தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றும், சஞ்சு சாம்சன் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. முதல் போட்டியில் 10 ரன்கள், 2வது போட்டியில் 6 ரன்கள், 3வது போட்டியில் 'டக் அவுட்' என சொதப்பியது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

திலக் வர்மா காயத்திலிருந்து சரியாகி இருந்தாலும், மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படவே வாய்ப்பு அதிகம். இதுவே அவருக்குக் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதால், தனது இடத்தைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் அவர் கட்டாயம் ரன் குவிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஒருவேளை சஞ்சு நீக்கப்படும் பட்சத்தில் இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

மேலும், அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நாளை (ஜனவரி 28) விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வழக்கம்போல் மாலை 6.30 மணிக்கு போடப்படும். போட்டி இரவு 7 மணிக்கே தொடங்கும்.

உத்தேசமாக இந்திய அணியில் - அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது.

மேலும், தொடரை தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி, எஞ்சியுள்ள போட்டிகளில் வெல்ல போராடும் என்பதால் இந்தப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா! அபிஷேக் சர்மாவின் அதிவேக சதம்... புரட்டி எடுக்கப்பட்ட நியூசிலாந்து!