Sports

அடம்பிடித்த வங்கதேசம்! அதிரடி காட்டிய ஐசிசி! டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேச அணி

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றது. வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கவுள்ள இந்த போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாட மாட்டோம் என, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி மறுத்துவந்தது.

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவி வரும் பதற்றம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிசிசிஐ வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு உத்தரவிட்டதே இந்த பிரச்னையின் தொடக்கமாக அமைந்தது.

முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2026 ஐபிஎல் தொடருக்காக 9.20 கோடிக்கு வாங்கியிருந்த நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கியது.

இது குறித்து வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், நாட்டிற்கும் இழைக்கப்படும் அவமதிப்பை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

கடந்த ஜனவரி 4-ம் தேதி, வங்கதேச கிரிக்கெட் வாரியம், வங்கதேச அரசுடன் கலந்தாலோசித்த பிறகு, பாதுகாப்பு காரணங்களால் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்கு வராது என்று ஐசிசிக்குக் கடிதம் எழுதியது.

இதற்குப் பதிலளித்த ஐசிசி, அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் செய்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியது.

வங்கதேசத்தின் பிடிவாதத்தைத் தொடர்ந்து, ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் துபாயில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கதேச அணியை நீக்கிவிட்டு மாற்று அணியைச் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

கடைசி முயற்சியாக, ஐசிசியின் இந்த முடிவை எதிர்த்துத் பிரச்சனைகள் தீர்க்கும் குழுவிடம் வங்கதேச அணி முறையிட்டது. ஆனால், ஐசிசியின் கொள்கை முடிவுகளில் தலையிட அக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்பதால், வங்கதேசத்தின் கோரிக்கைக்குப் பலன் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, தனது கிரிக்கெட் அணி உலகக்கோப்பை விளையாட இந்தியாவுக்குச் செல்லாது என்பதை வங்கதேசம் கடந்த 22ம் தேதி தெளிவுபடுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜன. 24) அறிவித்ததோடு, ஸ்காட்லாந்து அணியுடன் சேர்த்து போட்டிகளுக்கான புதிய அட்டவணையையும் அறிவித்துள்ளது.

வங்கதேச அணி வெளியேறியதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஸ்காட்லாந்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே ஸ்காட்லாந்து அணி 5 முறை ஐசிசி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளது. உலகக்கோப்பையில் 'சி' பிரிவில் ஸ்காட்லாந்து அணி இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. ஸ்காட்லாந்து அணியின் போட்டிகள் பெரும்பாலும் கொல்கத்தாவில் தான் நடைபெறவுள்ளன.

வங்கதேசத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், ஸ்காட்லாந்து அணிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் ஸ்காட்லாந்து அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

Also Read: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் மறுத்த வங்கதேச அணி... T20 உலகக்கோப்பையில் பங்கேற்குமா வங்கதேசம்?