Sports

இந்திய கிரிக்கெட் அணி படைத்த இமாலய சாதனை... மிரட்டிய இஷான் கிஷனின் ஆட்டம்! நாலாபுறமும் சிதறிய பந்துகள்!

நியூசிலாந்து - இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்தது. இதில், 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நேற்று (ஜனவரி 23) நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தது. இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 47 ரன்களும் எடுத்தனர்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

இக்கட்டான சூழ்நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட் ஆனார். இவருக்கு பின் வந்த சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். அதேபோல் மறுமுனையில் சிவம் துபே 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச சேசிங் பட்டியலை பொறுத்தளவு, 2009ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 207 ரன்களை சேஸ் செய்தது. 2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 208 ரன்களை சேஸ் செய்தது. அதே போன்று 2023ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 209 ரன்களை இந்தியா சேசிங் செய்திருந்தது. தற்போது நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 209 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா உடன் சேஸ் செய்த சாதனையை சமன் படுத்தியுள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 15.2 ஓவரில் துரத்தி பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் இந்திய பேட்டர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளனர்.

இந்த போட்டியில் 200 ரன்களுக்கும் மேலான இலக்கை, அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.

200 ரன்களைத் துரத்துவதே கடினம் என்ற நிலையில் இந்திய அணி 28 பந்துகள் மீதம் இருந்தபோதே இலக்கை அடைந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இதற்கு முன் 2025ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 24 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.

3 வது டி20 போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அடுத்த போட்டியை வென்றால் தான் நியூசிலாந்து அணிக்கும் தொடரை வெல்லும் வாய்ப்புள்ளது எனபதால், 3 டி20 போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Also Read: இந்தியா - நியூசிலாந்து முதல் T20 : அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்தியா - முழு விவரம் உள்ளே!