Sports

ஓய்வுபெற்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி… காரணம் என்ன?

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்துள்ளார். இந்தியாவிற்காக வெண்கலம், காமன்வெல்த்தில் தங்கம் வென்று சாதனை படைத்த நட்சத்திர வீராங்கனை தற்போது ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஹரியானாவில் பிறந்த இந்திய முன்னணி பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தனது சக வீரரான பருபள்ளி காஷ்யப் என்பவரை மணம் முடித்துள்ளார். ஹரியானாவில் பிறந்திருந்தாலும் பெரும்பாலான தனது வாழ்க்கையை ஹைதராபத்திலேயே வாழ்ந்துள்ளார்.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்த சாய்னா, 2023 சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றதே இவரது கடைசி போட்டியாக அமைத்தது.

சாய்னாவுக்கு 2009-ம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2010ம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுm வழங்கி ஒன்றிய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓய்வு குறித்து பேசிய சாய்னா, “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் உணர்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.

“என் ஓய்வை பெரிய விஷயமாக நான் கருதவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்றுதான் நான் உணர்ந்தேன். இதற்கான காரணம் என்னால் முன்பு போல் அதிக பயற்சி செய்ய முடியவில்லை. என் உடல் அந்தளவிற்கு ஒத்துழைக்கவில்லை.

உலக அளவில் சிறந்து விளங்க 8 முதல் 9 மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால், இப்போது என் மூட்டு 1 அல்லது 2 மணி நேரத்திலேயே சோர்வடைகிறது. அதன் பிறகு பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் போதும் என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேல் பயற்சி செய்ய முடியாது” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

2016 ஒலிம்பிக்கில் ஏற்பட்ட காயத்தால் சாய்னாவின் மூட்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வலுவான வீரராக கம்பேக் கொடுத்தார். 2024-ல் அவருக்கு மூட்டுவலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானம் இருப்பது உறுதியானது.

முழுக்க முழுக்க உடல்சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த சாய்னா, கடந்த 2 வருடங்களாக பெரிதளவில் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். எனினும், அவர் மீண்டும் களத்திற்கு திரும்புவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக சாய்னா அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Also Read: வந்தார்.. நின்றார்.. சென்றார்.. Repeatuh.. இதுவரை எத்தனை முறை பேரவையை விட்டு Exit ஆன ஆளுநர் ரவி? -விவரம்!