Sports
முதல்முறையாக இந்திய மண்ணில் தொடரை வென்ற நியூசிலாந்து… எங்கே சறுக்குகிறது இந்திய அணி?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்து இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்று சமனில் இருந்தன. இந்நிலையில் நேற்று (ஜன. 18) 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்களிலும், கேப்டன் சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களும், கே.எல்.ராகுல் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மிகவும் தடுமாற்றமாக ஆடி வந்த இந்தியா 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்துவர மறுமுனையில் விராட் கோலி நிதானமாக நின்று ஆடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை பெரும் சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின்னர் நிதிஷ் ரெட்டியும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜடேஜாவும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து வந்தநிலையில் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த போது, ஹர்ஷித் ராணா அதிரடியாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்.
சரிவை நோக்கிச் சென்ற அணியை விராட் கோலி-ராணா இணை மீட்டது. தொடர்ந்து கோலி சதம் விளாசினார். ஹர்ஷித் ராணாவும் மிரட்டல் ஆட்டம் மூலம் அரைசதம் கடந்து 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்க, மறுபக்கம் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.
அடுத்து அர்ஷ்தீப் சிங் களமிறங்க, மறுபக்கம் ரன் அவுட் ஆனார் குல்தீப் யாதவ். இதனால் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப் பெற்று தொடரையும் கைப்பற்றியது. நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தபோட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை கைப்பற்றி இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது நியூசிலாந்து அணி.
அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் சில மோசமான செயல்பாடுகள் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதிலும் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலியை நீக்கும் திட்டம் இருந்தால் இப்போதே அதனை கைவிட்டு விடுங்கள். அவர்களும் இல்லையென்றால் அணி மிகவும் மோசமான தோல்வியை சந்திக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Also Read
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?
-
பரந்த விரிந்த மனப்பான்மையாளர் : முதலமைச்சரின் செம்மொழி இலக்கிய விருது அறிவிப்பிற்கு கி.வீரமணி வரவேற்பு!