Sports

இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!

இந்திய- நியூசிலாந்துக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜன. 11) குஜராத் மாநிலத்திலுள்ள வதோரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 49-வது ஓவரில் 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் அதிகபட்சமாக இந்திய வீரர் விராட் கோலி 93 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டத்தோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இதனிடையே நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 11-வது ஓவரின் போது ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசிக் கொண்டிருக்க, விக்கெட் கீப்பரான கே.எல். ராகுல் அவருக்கு இந்தியில் சில ஆலோசனைகளை சத்தமாக கூறிக் கொண்டிருந்தார். அப்போது வர்ணனையில் இருந்த வருண் ஆரோன், "வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி ஓரளவுக்குத்தான் தெரியும். கே.எல்.ராகுல் இந்தியில் சொல்வது அவருக்கு முழுமையாகப் புரியாமல் போக வாய்ப்புள்ளது" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர் சஞ்சய் பங்கர், “நீங்கள் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக பேசாதீர்கள். தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நமது தேசிய மொழி” என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

இவரது பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த வருண் ஆரோன், “வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக பேசவில்லை. உண்மையாகவே வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி அவ்வளவாக தெரியாது. நான் உண்மையைத்தான் கூறினேன்” என்றார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையிலும், பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ள நிலையில் இந்தி தான் தேசிய மொழி என சர்வதேச போட்டியின் வர்ணனையாளர்கள் பேசியுள்ளது, தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வீரர்கள் தங்களது சொந்த மொழியிலும் அவர்களுக்கு தெரிந்த மொழியிலும் உரையாடுவது அவர்களது விருப்பம். இருப்பினும் வர்ணனையில் இருந்துகொண்டு ஒரு மொழியை உயர்த்தி பேசியிருப்பது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, நாடு முழுவதும் இந்தி மொழி குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வங்கி அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரிடம் இந்தியில் பேசக் கூறிய நிகழ்வு தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வங்கி அதிகாரி மன்னிப்பு கோரினார்.

நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் பிராந்திய மொழி தெரியாமல் இந்தி மட்டுமே தெரிந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளது தொடர் சர்ச்சையாகி வருகிறது. அதன்பின் அரசு அலுவலகங்களில் உள்ளூர் மொழி கட்டாயம் என பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பாக, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பு நடத்திய போது, அவர் தனது மொழியான காஷ்மீரியில் பேசியபோது செய்தியாளர்கள் இந்தியில் கேள்வி எழுப்பினர். இதற்கு அந்த இடத்திலேயே பதிலளித்த மெகபூபா முப்தி, நான் எனது மொழியில் பேசுகிறேன். என்னிடம் இந்தியில் கேள்வி கேட்கும் நீங்கள் தமிழ்நாட்டில் சென்று உங்களால் இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? என காட்டமாக பேசியிருந்தார்.

அண்மையில் மகாராஷ்ட்ரா மாநில உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மும்பை மாநகரம், மகாராஷ்டிராவுக்கு மட்டும் சொந்தமில்லை. இது ஒரு சர்வதேச நகரம் என பேசியிருந்தார். இந்த பேச்சு கூட மொழி ரீதியான ஒரு பிரிவினையாக தான் பார்க்கப்படுகிறது. இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்வினையும் ஆற்றி வருகின்றனர்.

தங்களது மொழி ஆதிக்கத்தை எங்கெல்லாம் காட்ட முடியுமோ அங்கெல்லாம் சற்றும் சலிக்காமல் காட்ட முற்படும் இந்தி மொழி ஆதிக்கவாதிகளுக்கு, தமிழ்நாடு என்றுமே தன்னிகரில்லா பாதையைத்தான் உருவாக்கி வைத்துள்ளது. என்றுமே ஒரு மொழிக்கு எதிர்ப்பாக இல்லாமல் மொழியின் ஆதிக்கத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது, போல இந்தியாவில் அனைத்து மொழிகளும் வாழ வேண்டும். எந்த மொழியும் ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடும் கூட.

இதுபோன்றதொரு சூழலில் விளையாட்டிலும் மொழி ஆதிக்கத்தை செலுத்துவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. விளையாட்டை விளையாட்டாக கடந்து செல்ல வேண்டுமே தவிர, அங்கு ஒரு சர்ச்சையை கிளப்புவதை இந்தியாவில் உள்ள மக்கள் யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

Also Read: “இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!