Sports

"பரிசை ஏற்றுக்கொண்டால் அது என் பாக்கியம்"- சர்ஃப்ராஸ்கான் தந்தைக்கு கார் பரிசாக வழங்கும் ஆனந்த் மஹிந்திரா

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை இந்திய அணிக்கு தேர்வாகும் முக்கியத் தொடராக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறித்து. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது.

அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83.

ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தார்.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

அவருக்கு இந்திய அணியின் தொப்பியினை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார். இந்த நிகழ்வின் போது வை சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷாத் கான் நேரில் கண்டுகளித்ததோடு, தனது மகனின் முதல் தொப்பியை தனது கைகளில் எடுத்து முத்தமிட்டார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், ' ஒரு உத்வேகம் தரும் பெற்றோராக இருந்து, நௌஷாத் கான் என்னிடமிருந்து தார் காரை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியமாகவும், கௌரவமாகவும் கருதுவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

நௌஷாத் கான் மஹாராஷ்டிர அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பதோடு அவரின் மற்றொரு மகனான முஷீர் கான் சமீபத்தில் முடிவடைந்த 19 வயதுக்கு உற்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு முஷீர் கான் அந்த தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்தார்.

Also Read: “உலகளவில் 5ஆவது இடம் - தனிநபர் வளர்ச்சியில் 129ஆவது இடம்” : மோடி ஆட்சியில் இந்திய மக்களின் நிலை இதுதான்!