Sports

"கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதித்த ICC-யின் நடவடிக்கை சட்டவிரோதமானது" - இலங்கை அமைச்சர் கருத்து !

கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. எனினும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிட்டதாக கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமான தடை செய்துள்ளதாக அறிவித்தது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தற்காலிகமாக தடை விதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்முடிவு சட்டவிரோதமானது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஐசிசியின் இடைநிறுத்தம் அதன் சொந்த விதிகளுக்கு எதிரானது. அந்த அமைப்பு முதலில் மற்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக அதனை மாற்றியமைக்க முயற்சித்து வருகிறோம். ஐசிசியால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தை நாடுவேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த வாரம் ஐசிசி அதிகாரிகளை சந்திக்க துபாய் செல்ல உள்ளேன். அதற்கு முன்னர், அரசியல் தலையீடு இருக்காது என் அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்" என்று கூறினார்.

Also Read: உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு : கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் அசாம் முடிவு ?