Sports

அதிரடி சதம் விளாசிய கிளாசென் : 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா !

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி வீரர் டீ காக் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சா ஹென்ரிக்ஸ்,வான் டர் டஸ்ஸன் ஆகியோர் அரைசதமடித்து ஆட்டமிழந்தனர்.

ஆனால், இறுதிக்கட்டத்தில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹென்றிச் கிளாசென் 67 பந்துகளில் 109 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த மார்கோ ஜென்சன் 42பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். இதனால் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

பின்னர் 400 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். டேவிட் மாலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், புரூக், கேப்டன் ஜோஸ் பட்லர் என அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர்.

இறுதிகட்டத்தில், அட்கின்சன் (35) மற்றும் மார்க் வுட் (43) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

Also Read: குஜராத் : பாரம்பரிய நடனத்தின்போது மாரடைப்பு: அடுத்தடுத்து 10 பேர் பலி- நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம் !