Sports

Asian Games: பதக்கத்தை உறுதி செய்த ஆடவர் அணி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா !

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அதன்படி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளம் அணியை சந்தித்தது. இந்த தொடருக்கு ஐசிசி சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், இந்த போட்டியின் மூலம் ஜிதேஷ் வர்மா மற்றும் தமிழ்நாடு வீரர் சாய் கிஷோர் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகினர்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நேபாள அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே குவிக்கமுடிந்தது. இந்திய தரப்பில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. இதனால் இந்திய அணி 9.2 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்திய தரப்பில், ருதுராஜ் 40 ரன்களும், திலக் வர்மா 55 ரன்களும் குவித்தனர்.

Also Read: ICC உலகக்கோப்பை : முதல் போட்டியில் படுதோல்வியடைந்த நடப்பு சாம்பியன்.. பழிதீர்த்த நியூஸிலாந்து !