Sports

உலககோப்பைக்கான வங்கதேச அணியில் நட்சத்திர வீரர் புறக்கணிப்பு: பின்னணியில் ஷாகிப் அல் ஹசன்- ரசிகர்கள் ஷாக்!

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

அதன்பின்னர் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகிவரும் நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும் , சீனியர் நட்சத்திர வீரருமான தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச பிரதமர் சேக் ஹசினா இந்த விவகாரத்தில் தலையிட்டு தமீம் இக்குபால் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் தமீம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Tamim Iqbal

ஆனால், நேற்று முன்தினம் வெளியான உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியில் தமீம் இக்பால் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமீமின் பெயர் அணியில் இடம்பெறாததற்கு அந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன்தான் காரணம் என்று கூறப்பட்டது.

இது குறித்து வெளியான செய்திகளில் தமீம் அணியில் இடம்பிடித்தால் நான் அணியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் தேர்வு குழுவுக்கு மிரட்டல் விடுத்ததாலேயே தமீம் இக்பாலை அணியில் சேர்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாலியல் வழக்கில் அதிரடி கைது.. இலங்கை வீரரை விடுவித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.. முழு விவரம் என்ன ?