Sports

"இந்திய அணிக்காக விராட் கோலி அதை செய்வாரா எனத் தெரியவில்லை" - டி வில்லியர்ஸ் கூறியது என்ன ?

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அணியில் நடுவரிசை பலவீனமாக இருப்பதாக பலரும் கூறிவருகிறனர். மேலும் யுவராஜ் சிங்குக்கு பிறகு இந்தியாவின் நம்பர் 4 -வது வீரராக யாரும் சரியாக பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்தில் சற்று சிறப்பாக ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் மற்றம் கே.எல்.ராகுல் ஆகியோரும் காயத்தில் இருந்து தற்போதுதான் மீண்ட நிலையில், அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் விராட் கோலி இந்தியாவின் நம்பர் 4 -வது வீரராக களமிறங்குவார் என செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் விராட் கோலி களமிறங்கினால் மிகச் சரியான தேர்வாக இருக்கும் என முன்னாள் தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்திய அணியில் 4-வது இடத்தில் விராட் கோலி களமிறங்கவுள்ளதாக பரவும் வதந்தி குறித்து நான் கேள்விப்பட்டேன். அந்த தகவல் உண்மையாக இருந்தால், நான் அதற்கு நான் நிச்சயம் ஆதரவாக இருப்பேன்.

அவர் 3-வது வீரராக களமிறங்குவதையே விரும்புவார். ஆனால் அவர் 4-வது இடத்தில் களமிறங்கினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய அளவில் ரன்கள் குவிப்பார். இதற்கு முன்னரே அந்த இடத்தில் அவர் களமிறங்கி சிறப்பாக ஆடியுள்ளார். இதனால் இந்திய மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்கு விராட் கோலி மிகச் சரியான தேர்வாக இருப்பார் என நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: நிர்வாணமாக ஓடவைத்து ராகிங்.. கொடுமை தாங்கமுடியாமல் மாணவர் தற்கொலை.. வங்கத்தை உலுக்கிய கொடூரம் !