Sports
FIFA மகளிர் உலகக் கோப்பை : இறுதிப்போட்டியில் ஸ்பெயின் VS இங்கிலாந்து.. கோப்பையை வெல்லப்போவது யார் ?
FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, 7-வது இடத்தில் இருக்கும் கனடா, 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் போன்ற அணிகள் வெளியேறின.
அதனைத் தொடர்ந்து 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் நான்கு முறை உலககோப்பை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்கா - ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்வீடன் அணி அமெரிக்காவை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.
காலிறுதியில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு போட்டியில், ஸ்வீடன் அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதோடு போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் அணியை 7-க்கு 6 என்ற கணக்கில் பி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னணி பெற்றது. ஆனால் இதற்கு 88-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி கோல் அடித்து பதிலடி கொடுத்தது.இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி அடுத்த கோல் அடிக்க அதுவே வெற்றிகோலாக மாறியது. இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் அடிக்க, இதற்கு 63-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆஸ்திரேலிய அணி பதில் கோல் அடித்தது. ஆனால், அடுத்தடுத்து இரு (71,86 நிமிடங்களில் )கோல் அடித்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதன் மூலம் இந்த இரு அணிகளில் ஒரு அணி முதல் முறையாக உலகக்கோப்பையை ஏந்தவுள்ளது உறுதியாகியுள்ளது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!