Sports

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு தேசிய அணியில் இடம்.. IPL வீரருக்கு இறுதியில் கிடைத்த வாய்ப்பு !

2016-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, நேபாள அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப் லமிச்சானே. லெக் ஸ்பின்னரான அவர், அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பெரும் கவனத்தை ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடந்த லீக் போட்டிகளில் பங்கேற்று அங்கும் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் அவர் இடம்பெற்றார். தனது சிறப்பான செயல்பாடு காரணமாக நேபாள அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

அவர் மீது கடந்த ஆண்டு காவல்நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அவர் கூறியுள்ள புகாரில், நான் அவரின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன் முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். பின்னர் அவரை சந்தித்த நிலையில், 2 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் சிறுமிக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபிக்கப்பட்டதாக நேபாள போலிஸார் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யபட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தற்போது நடந்துவரும் நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட நேபாள அணியில் சந்தீப் லமிச்சானேவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் காரணமாக அவருக்கு அணியில் இடம் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: "தோனியின் வார்த்தையை வைத்து இந்திய அணி தனது தவறை நியாப்படுத்துகிறது" -முன்னாள் வீரர் விமர்சனம் !