Sports

தொடர்ந்து கலக்கும் தமிழ்நாடு வீரர்.. தியோதர் கோப்பை தொடரிலும் அசத்தல்.. இந்திய அணி வாய்ப்பு கிடைக்குமா ?

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.

அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதம் விளாசி அசத்தினார்.

அவரின் இந்த தொடர்ச்சியான செயல்பாடு காரணமாக தியோதர்கோப்பைக்கான தெற்கு மண்டல அணியில் அவர் இடம்பிடித்தார். இறுதி கட்டத்தில்தான் அவர் அணியில் இணைந்ததன் காரணமாக அவருக்கு 3 போட்டிகளில் மட்டுமே ஆடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த 3 போட்டியில் 102 ரன்கள் சராசரியோடு 204 ரன்கள் குவித்து அந்த தொடரில் அதிக சராசரி கொண்ட வீரராக திகழ்ந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 7-ம் இடத்தை பிடித்துள்ளார்.

அதோடு இவர் இடம்பெற்ற தெற்கு மண்டல அணி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இந்த தொடரில் சாய் சுதர்சன் மத்திய மண்டல அணிக்கு எதிரான சதமடித்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒட்டுமொத்தமாக சொதப்பிய இந்திய பேட்டிங்.. இளம் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி !