Sports

ஒரு விக்கெட்டால் வந்த வினை.. முட்டிக்கொள்ளும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பிரதமர்கள்.. ஆஷஸ் தொடரால் சர்ச்சை !

டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இறுதி நாளில் இறுதி கட்டத்தில் 2 விக்கெட்டுகள் மீதான இருந்த நிலையில், 54 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் எதிர்பாராத இடத்தில இருந்து தங்கள் விக்கெட்களை இழக்காமல் திரில் வெற்றியை பதிவு செய்தது. கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை பெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-வது இன்னிங்சின் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்ரீன் பந்து வீசினார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் விட்ட நிலையில்,பந்து கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது, உடனே ஓவர் முடிந்துவிட்டதாக கருதிய பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீச ரன் அவுட்க்கு அப்பீல் செய்யப்பட்டது.

முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்ற நிலையில், ஐசிசி விதிமுறையின்படி மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார். இந்த விக்கெட் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என மைதானத்திலேயே கூச்சலிட்டனர். அதோடு இங்கிலாந்து ஊடகங்களும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி மீது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் பிரதமர்கள் தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் , "பேர்ஸ்டோ அவுட் ஆன விவகாரதுக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரின் அந்த கருத்துக்கு நமது பிரதமரும் உடன்படுகிறார், ஆஸ்திரேலியாவைப் போல என்ன செய்தாவது ஆட்டத்தை வெல்ல வேண்டும் என நாம் நினைப்பதில்லை" என்று கூறினார்.

அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் குறித்துத் தான் பெருமை கொள்வதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டிகளை வெற்றியுடன் தொடங்கியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Also Read: "சொன்னதை செய்துள்ளேன்" : இந்தியாவுக்கு வருகைதந்த அர்ஜென்டினா கோல்கீப்பர்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !