Sports
குட்டி மலிங்காவை வேஸ்ட் செய்த இலங்கை அணி.. தோனியை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு ரசிகர்கள் விமர்சனம் !
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நாயகனாக இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் பதிரனா உருவெடுத்தார். பிரபல இலங்கை வீரர் மலிங்காவை போலவே வித்தியாசமான முறையில் பந்துவீசும் இவர் அவரைப் போலவே தொடர்ந்து சிறப்பாகவும் பந்துவீசி வருகிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் இறுதிக்கட்டத்தில் சிக்கனமான பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள அவர், இறுதிக்கட்டத்தில் தனது கூர்மையான யார்கர்களால் எதிரணி வீரர்களை திணறடித்தார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பதிரனா நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.
பதிரனா குறித்துப் பேசிய தோனி, " பதிரானா போன்ற வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பௌலர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால்வாய்ந்தது. அவரின் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்துமே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.
அவரை ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வைப்பதை இலங்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். மேலும் ஐசிசி தொடர்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும்.கடைசியாகப் பார்க்கும்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியில் பதிரனா அறிமுகமானார். ஆனால் முதல் போட்டியில் அவர் 8.5 ஓவர்களை வீசி 66 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதோடு மோசமான வகையில் 16 வைடு பந்துகளை வீசினார். இந்த போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் பதிரனாவுக்கு வாய்ப்பு அளிக்காமல் அவரை இலங்கை அணி பெஞ்சில் அமரவைத்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனால் அடுத்த போட்டியிலும் பதிரனாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் முதல் போட்டியிலேயே சிறந்த வீரர் ஒருவரின் நம்பிக்கையை இலங்கை அணி குறைத்த நிலையில், வரும் காலத்தில் அந்த அணிக்கே அது பாதகமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தோனி பதிரனா மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆடவைத்ததன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக உருவெடுத்தார் என்றும், அவரை பார்த்து இலங்கை அணி நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!