Sports
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரசிகர்கள் வழங்கிய பொம்மைகள்..கால்பந்து போட்டியில் நெகிழ்ச்சி
மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்போது வரை அங்கு சிறிய அளவில் நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் துருக்கிய கால்பந்து போட்டியின்போது ரசிகர்கள் உடைகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருள்களை அன்பளிப்பாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் பெசிக்டாஸ் மற்றும் அண்டலியாஸ்போர் இடையே லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது ரசிகர்கள், தாங்கள் அறிவித்திருந்தபடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உடைகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருள்களை மைதானத்தை நோக்கி வீசி எறிந்தனர்.
இதன் காரணமாக ஆட்டம் 4 நிமிடங்கள் 17 வினாடிகள் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருள்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் என போட்டியை நடத்திய கால்பந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் சமூகவலைத்தளம் மூலம் ஒன்றிணைந்து இந்த செயலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!