Sports

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட்.. காப்பாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த மாநில அரசு !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் மூளையில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன், வலது முழங்காலில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட தசைநார் கிழிப்பிற்கு 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதிலிருந்து ஆறு வாரங்களுக்குப்பின், மீண்டும் இதே முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளது.இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 4 பேருக்கு உத்தரகாண்ட் அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷாகர் சிங் தாமி விருது வழங்கினார். மேலும், அவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: இங்கிலாந்து செல்லுங்கள்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவால் IPL தொடருக்கு சிக்கல்! பின்னணி என்ன?