Sports
"BCCI-ன் பாஜக மனநிலை பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாதிக்கிறது" : முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஸா, சமீபத்தில் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்குப் பதில் நஜாம் சேத்தி இப்போது தலைவராகப் பொறுப்பேற்றிருகிறார். அதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறார் ரமீஸ் ராஸா. நஜாம் சேத்தியோடு அவர் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதாகக் கூட மிரட்டியிருக்கிறார் நஜாம் சேத்தி.
இப்போது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருக்கிறார் ரமீஸ் ராஸா. இம்முறை அவர் டார்கெட் செய்திருப்பது இந்தியாவை. "துருதிருஷ்டவசமாக இந்தியா முழுவதும் பாஜக மனநிலை பரவிவிட்டது. PJL, பாகிஸ்தான் பெண்கள் லீக் போன்ற திட்டங்களை நான் அறிவித்ததற்குக் காரணம், அதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு வருவாய் வரும். அதனால், ஐசிசி வருவாயை மட்டும் நம்பியிருக்கும் நம் நிலை மாறும். இப்போதைய சூழ்நிலையில் அது மிகவும் முக்கியம்" என்று சமீபத்தில் லாகூரிலுள்ள ஒரு அரசு பல்கலைக்கழகத்தில் நடந்த அமர்வில் பேசியிருக்கிறார் ரமீஸ் ராஸா.
"நம் சங்கம் சுதந்திரமாக செயல்பட முடியாததற்குக் காரணம், ஐசிசி-யின் பெரும்பான்மை வருவாய் இந்தியாவில் தான் வருகிறது. பாகிஸ்தானை ஒதுக்குவது தான் இந்தியாவின் மனநிலையாக இருக்கும்போது நம்மால் இந்தப் பக்கமும் இருக்க முடியாது, அந்தப் பக்கமும் இருக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் அவர்.
இந்த பிரச்சனை குறித்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கங்களிடமும் கேட்டதாகக் குறிப்பிட்ட ராஸா, ஐசிசி-யில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் அமரவேண்டும் என்று கூறியதாகத் தெரிவித்திருக்கிறார். அதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பாதுகாக்கும் என்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் ரமீஸ் ராஸா.
"நான் என்னுடைய மனநிலையை தெளிவாக அறிவுறித்திவிட்டேன். எங்களை ஒரு தொடரை நடத்தச் சொல்லி ஆசிய கிரிக்கெட் சங்கம் சொன்னபிறகு, ஒரு நன்னாளில் வந்து நாங்கள் பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என்று இந்தியா சொல்லுமேயானால், அதனால் இங்கிருந்து அந்தத் தொடரும் வெளியேற்றப்படுமேயானால், எங்களுக்கும் சில ஆப்ஷன்கள் இருக்கிறது" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார் அவர்.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமிடம் "இந்தியாவுக்கு எதிராகத் தோற்பது ஒரு ஆப்ஷனாக இருக்கவே கூடாது" என்று கூறியது பற்றியும் பேசினார்.
"இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே, எங்களுக்கு தேவையானதைக் கேட்கும் ஒரு நல்ல நிலையில் இருக்க் அமுடியும். அப்போதுதான் அவர்களின் வரலாறு உடையும்" என்று தெரிவித்தார் அவர்.
தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டது பற்றியும் பேசியிருக்கிறார் ரமீஸ் ராஸா. "கொள்ளைப் புறமாக உள்ளே நுழைந்து, சட்டத்தை உடைத்து, கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் ஒருவரை வெளியே தள்ளுவது என்பது மிகவும் மோசமானது. எல்லாமே அர்த்தமற்றுப் போகும். எது சரி, எது தவறு என்பது சமூக வலைதள விவாதங்களில் தொலைந்து போய்விடும். இவை எல்லாமே மாறவேண்டும்" என்று பேசினார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!