Sports

அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை.. “ரிஷப் பந்திற்கு ஓய்வு கொடுப்பதே இல்லை..” -குடும்பத்தார் குமுறல்

இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வரும் இளம் வீரர் ரிஷப் பண்ட், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், அவரது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் மூளையில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், முட்டியில் வீக்கம் இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் தற்போது முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், இவரை காண அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என கூட்டம் கூட்டமாக நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகர் அனுபம் கேர், அணில் கபூர், நிதிஷ் ராணா போன்ற சில முக்கிய கிரிக்கெட் வீரர்கள், கண்பூர் எம்.எல்.ஏ உமேஷ் என பாரும் வருகை தருகின்றனர். இதனால் ரிஷப் ஓய்வெடுக்க முடியவில்லை என்று கூறபடுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ரிஷப், உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் ஓய்வெடுக்க போதுமான நேரம் பெறுவது முக்கியம். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் அவர் இன்னும் வலியுடன் இருக்கிறார். அவரை சந்திக்க அதிகம் பேர் வருகை தருகின்றனர். அப்போது ரிஷப் அவர்களிடம் பேசுகிறார். இது அவரது ஆற்றலைக் குறைக்கிறது. அவரைச் சந்திக்கத் திட்டமிடுபவர்கள் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு அவரை ஓய்வெடுக்க விட வேண்டும்." என்றனர்.

Also Read: #REALHEROES : விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. யோசிக்காமல் காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு !