Sports

25 வருடத்தில் இல்லாத Traffic.. ஒரே இரவில் திணறிய Google . சுந்தர் பிச்சை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்த போட்டியால் கூகிள் நிறுவனமே திணறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. போட்டி குறித்த தகவல், கோல்கள் குறித்த அப்டேட், உலகக்கோப்பை குறித்து பழைய தேடல் என அனைத்தையும் கூகிளில் கால்பந்து ரசிகர்கள் தேடியுள்ளனர். அதிலும் குறிப்பாக மெஸ்ஸியின் உலகக்கோப்பை பயணம், பிரான்ஸ் வீரர் எம்பாபே, மரடோனா போன்ற கால்பந்து பிரபலங்களை குறித்து அதிகம் தேடல் நடைபெற்றுள்ளது.

இது குறித்து பேசிய, கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, நேற்று இரவு மக்கள் எல்லோரும் ஒரே விஷயத்தை தேடி இருப்பதாகவும் இதனால் கடும் டிராபிக் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், #FIFAWorldCup இன் இறுதிப் போட்டியின் போது கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான ட்ராஃபிக்கைப் பதிவுசெய்தது என்றும், உலகில் இதற்கு முன் கடந்த 25 வருடங்களில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் எதை பற்றியும் தேடியது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read: உலகே கோப்பையை வென்றது போன்ற உணர்வு..கால்பந்தில் கடவுளாக மாறிய மெஸ்ஸி.. மாயாஜாலக்காரன் கடந்து வந்த பாதை !