Sports

இரண்டே உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் சாதனை சமன்.. ரொனால்டோவை முந்தி அதகளப்படுத்தும் பிரான்ஸின் இளம்வீரர் !

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் போலந்து அணியை சந்தித்தது. இதில் ஆரம்பம் முதலே அட்டகாசமான ஆசிய பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் போலந்து அணியை எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் உலகின் மதிப்புமிக்க வீரர் கிலியன் எம்ப்பாபே இரண்டு கோல் அடித்து அசத்தினார்.

இந்த இரண்டு கோல்கள் மூலம் உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்து எம்ப்பாபே அசத்தியுள்ளார். கடந்த முறை உலகக்கோப்பை தொடரில் எம்ப்பாபே 4 கோல்களை அடித்தார். அதேபோல இந்த உலகக்கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் 5 உலகக்கோப்பையில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் 9 கோல் என்ற சாதனையை 23 வயதான இளம்வீரர் எம்ப்பாபே சமன் செய்துள்ளார். அதே நேரம் உலகக்கோப்பையில் ரொனால்டோ, ஹென்றி, நெய்மார் போன்ற நட்சத்திரங்களை விட தற்போதே அதிகம் கோல்கள் அடித்துள்ளார்.

1959-ஆம் ஆண்டில் பீலே, 1978-ஆம் ஆண்டில் கெம்பஸ் , 2014-ஆம் ஆண்டில் ஜெம்ஸ் ரோட்ரிகிஸ் ஆகியோர் ஒரே உலகக்கோப்பை தொடரில் 6 கோல் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் கிலியன் எம்ப்பாபே தற்போது 5 கோல் அடித்துள்ள நிலையில் இன்னும் 2 கோல் அடித்தால் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்தவர் என்ற உலகசாதனையை படைப்பார்.

அதேநேரம் நேற்று நடைபெற்ற மற்றொரு நாக் அவுட் சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் செனக்கல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இணையாக இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "சாம்சன், இஷான் கிஷான் எல்லாம் எதுக்கு இருக்காங்க? " - ராகுலால் BCCI-யை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !