Sports

சத்தமில்லாமல் உலகசாதனை படைத்த புவனேஷ்வர் குமார்.. இரண்டாம் இடமும் இந்திய வீரருக்கே! சாதனை என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் பும்ரா இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மனதில் எழுந்தது.

பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் சமி இடம்பெற்றாலும் டி20-யில் அதிக அனுபவம் பெற்ற புவனேஷ்வர் குமார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப புவனேஷ்வர் குமார் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் அவர் வீசும் பந்துகள் எதிரணியினர் தொட முடியாத அளவில் உள்ளது.

கடைசியாக இந்திய அணி ஆடிய ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசி இருப்பார் புவனேஷ்வர் குமார். இதன் காரணமாக சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து புவனேஷ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பட்டியலில் இந்திய வீரர் பும்ரா முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை புவனேஷ்வர் குமார் முறியடித்துள்ளார். 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்களுடன் 82 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

அதேநேரம் பும்ரா 60 போட்டிகளில் விளையாடி 9 மெயிடன் ஓவர்களுடன் 70 விக்கெட்கள் எடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் அசோசியேட் நாடுகளை சேர்ந்த வீரர்களே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இப்போ நெதர்லாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்துகொள்ளுங்க"-பாகிஸ்தான் நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!