Sports

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. நான் கடும் வலியில் இருக்கிறேன் .. சோயப் அக்தர் உருக்கம் !

கிரிக்கெட் உலகின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானை சேர்ந்த சோயப் அக்தரும் ஒருவர். கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசியவர் என்ற சாதனை இப்போதும் இவர் வசம்தான் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முறை 161.3 கிலோமீட்டர் (100.2 mph) வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்து இருக்கிறார்.

இந்த வேகம் காரணமாக ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற அடைமொழியுடன் இவர் அழைக்கப்படுகிறார். இவரது வேகத்தை கண்டு ஒரு காலத்தில் பேட்ஸ்மேன்கள் அஞ்சி வந்தனர். அதன்பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கிரிக்கெட் ஆடிய காலத்தில் இருந்தே அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். தற்போது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் இவர் அதற்காக ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இன்னும் 4-5 ஆண்டுகள் கூடுதலாக பாகிஸ்தானுக்கு ஆடியிருந்தால் நான் சக்கர நாற்காலியில் வாழ்நாள் பூராவும் அமர வேண்டிய துர்பாக்கியசாலியாகியிருப்பேன். இதனை அறிந்துதான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆனாலும் கடந்த 11 ஆண்டுகளாக வலியில் இருந்து வருகிறேன்.

ஓய்வு பெற்ற பிறகும் முழங்கால் வலி பயங்கரமாக இருக்கிறது. இதுதான் வேகப்பந்து வீச்சுக்கு நாம் கொடுக்கும் விலை ஆனால் அதுவுமே பாகிஸ்தானுக்காகச் செய்வது மதிப்பு மிக்கதுதான். வேகமாக வீசுவதன் பலன் எலும்புகளை இழந்து விடுவோம். ஆனால், மீண்டும் பாகிஸ்தானுக்காக எலும்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ரசிகர்கள் தனக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Also Read: நம்பிச்சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்.. நடுத்தெருவில் வீசிச்சென்ற கொடூரம் !