Sports

கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த மிதாலி ராஜ்.. அவரின் 5 மகத்தான சாதனைகள்!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மிதாலி ராஜ். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சகாப்தம் ஒன்று முடிவுக்கு வந்திருக்கிறது. 1999 ஜூன் மாதம் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய மிதாலி ராஜ், 2005ம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்தார்.

“எல்லா பயணங்களைப் போல் இதுவும் ஒருநாள் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். இது, நான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் நாள்” என்று கூறியிருக்கிறார் 39 வயதான மிதாலி ராஜ். அவருடைய கரியரின் ஐந்து மகத்தான சாதனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:

சர்வதேச அரங்கில் 10,868 ரன்கள் அடித்து ஓய்வு பெற்றிருக்கிறார் மிதாலி ராஜ். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். அதற்கு முன்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சர்லோட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்திருந்தார். இதை ஜூலை 2021ல் கடந்தார் மிதாலி ராஜ். இவர்கள் இருவரும்தான் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்தவர்கள்.

மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்: மகளிர் ஒருநாள் போட்டிகளில் 7805 ரன்கள் குவித்திருக்கிறார் மிதாலி ராஜ். இரண்டாவது இடத்தில் இருக்கும் சர்லோட் எட்வர்ட்ஸ் 5992 ரன்கள்தான் எடுத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்டெஃபானி டெய்லர் 5298 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர்:

மகளிர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையோடு ஓய்வு பெற்றிருக்கிறார் மிதாலி ராஜ். ஆனால், அவரை டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சீக்கிரம் முந்திவிடக்கூடும். அவர் 2319 ரன்கள் அடித்திருக்கிறார். மிதாலியோ 2364 ரன்கள் எடுத்திருக்கிறார்.

கேப்டனாக அதிக ஒருநாள் போட்டிகள்:

இந்திய அணியை 155 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி வழிநடத்தியிருக்கிறார் மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் இதற்குப் பக்கத்தில் கூட இல்லை. இங்கிலாந்தின் சர்லோட் எட்வர்ட்ஸ் 117 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் பெலிந்தா கிளார்க் 101 போட்டிகளிலும் தங்கள் அணிகளை ஒருநாள் கிரிக்கெட்டில் வழிநடத்தியிருக்கிறார்கள்.

இளம் வயதில் டெஸ்ட் இரட்டைச் சதம்:

தன்னுடைய 19வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார் மிதாலி ராஜ். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர் அவர்தான். டான்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் 407 பந்துகளில் 214 ரன்கள் குவித்த மிதாலி, இந்திய அணி அந்தப் போட்டியை டிரா செய்வதற்கு உதவி புரிந்தார்.

Also Read: IPL 2022 தொடரின் சிறந்த வீரர் ராகுல் திரிபாதி.. பாராட்டிய முன்னாள் இந்திய அணியின் நட்சத்திரம்!