Sports

“இந்த சிறப்பை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை” : சாதனை படைத்த அவனி பிரஷாந்த்! #SportsUpdates

1) ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக உமர்குல் நியமனம்

ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான உடன்படிக்கையின்படி, உமர்குல் அணியுடன் மூன்று வார காலம் பணியாற்றுவார். அவரது பணி திருப்திகரமாக இருந்தால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். ஆப்கானிஸ்தான் அணியில் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் பேசும் அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2) உலக கோப்பை கால்பந்து - ஒரே பிரிவில் இடம்பிடித்த ஜெர்மனி, ஸ்பெயின்

32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பது ஜூன் மாதம் தெரிய வரும். இந்நிலையில், இந்த போட்டியில் லீக் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடந்தது. ஒரே பிரிவில் ஜெர்மனியும் ஸ்பெயினும் இடம்பிடித்துள்ளன. ஐந்து முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.

3) பஞ்சாப் அணியை பறக்கவிட்ட ரஸ்ஸல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர், அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் 26 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட ரஸ்ஸல், 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் அடித்த கொல்கத்தா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்.

4) அகஸ்டா பெண்கள் கோல்ஃப் போட்டிச் சுற்றுக்கு நுழைந்த முதல் இந்தியர்!

ஜார்ஜியாவில் நடந்து வரும் அகஸ்டா நேஷ்னல் வுமென்ஸ் அமெச்சூர் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அவனி பிரஷாந்த் போட்டி சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். அகஸ்டா நேஷ்னல் கோல்ஃப் கிளப்பில் போட்டிச் சுற்றில் விளையாடும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள 72 சிறந்த பெண் அமெச்சூர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5) 118 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

நெதர்லாந்து நியூசிலாந்துக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக லாதம் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Also Read: உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக இந்தியப் பெண்மணி.. யார் இவர்? #5in1_Sports