Sports

“பாசமாக பேசி அனுப்பிய கோலி.. ஆப்பு வைத்த போலிஸார்” : மைதானத்தில் புகுந்த ரசிகர்களுக்கு நடந்தது என்ன?

விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க மைதானத்திற்கு புகுந்த ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என கோலி கேட்டுக்கொண்ட நிலையில் போலிஸார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா.

பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஏமாற்றினர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய இலங்கை அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது.

143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்ஸில் 303/9 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 447 என்ற மெகா இலக்கைத் துரத்தி வரும் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் என்ற நிலையில் ஆடி வருகிறது.

இப்போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானத்தில் விராட் கோலி தனது 101-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். 2-வது நாள் ஆட்டத்தின் இரவு நேரத்தில் பாதுகாப்புச் சுவர் மற்றும் பாதுகாவலர்களை உடைத்துக்கொண்டு பெங்களூரு ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்தனர்.

இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த 3 ரசிகர்களும் நேராக விராட் கோலியிடம் சென்று அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அதைப் பார்த்த போலிஸார் அவர்களை பிடிக்க மைதானத்திற்குள் ஓடினர்.

விராட் கோலி தன் மீதான அபிமானத்தால் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர்களுடன் முகத்தை சுளிக்காமல் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதற்குள் அவர்களை நெருங்கிய பாதுகாவலர்கள் அவர்களை பிடித்து மைதானத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது விராட் கோலி, தனது ரசிகர்களை எதுவும் செய்ய வேண்டாம் என பாதுகாவலர்களிடம் கூறியது மட்டுமல்லாமல் இந்த செயலுக்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஆனால், அந்த ரசிகர்களின் விவரங்களை குறித்து வைத்த பெங்களூரு காவல்துறையினர், இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: சரிந்தது கோலியின் சராசரி; டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான இன்னிங்ஸ் ஆடிய விராட்!