Sports

U19 WORLD CUP 2022: அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றை எட்டியிருக்கும் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதவிருக்கின்றன. சமபலம் கொண்ட இரண்டு அணிகளும் முட்டி மோத இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்திய அணி இதுவரை நான்கு முறை வென்றுள்ளது. இதுவே அதிகபட்சமாகும். வேறெந்த அணியும் இத்தனை முறை வென்றதில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 3 முறை இந்த உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இப்போது இந்த இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்திய அணி கடைசியாக 2018 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றிருந்தது. அதன்பிறகு, 2020 இல் நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்தியா எப்போதுமே ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருந்திருக்கிறது. இந்த முறையும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

க்ரூப் சுற்றில் தென்னாப்பிரிக்கா, உகாண்டா, அயர்லாந்து ஆகிய அணிகளை ரொம்பவே எளிதாக இந்திய அணி வென்றிருந்தது. கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசாக அளித்திருந்த வங்கதேசத்திற்கு எதிராக காலிறுதிப்போட்டியிலும் சிரமமே இன்றி வென்றிருந்தது.

ஆஸ்திரேலிய அணி தொடக்கப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எளிமையாக வென்றிருந்தது. ஆனால், இரண்டாவது போட்டியிலேயே இலங்கைக்கு எதிராக அதிர்ச்சிகரமாக தோற்றிருந்தது. தோல்வியிலிருந்து மீண்டு ஸ்காட்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி காலிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்திய வீரர்கள் குறிப்பாக கேப்டன் யாஸ் துல் உட்பட பலருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு போட்டிகளை தவறவிட்டிருந்தனர். ஆனாலும், இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. இப்போது அனைத்து வீரர்களும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதால் இந்திய அணி முழுபலத்துடன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

பேட்டிங்கை விட இந்திய அணி பந்துவீச்சிலேயே அதிக கவனத்தை ஈர்க்கிறது. இந்த தொடரில் இதுவரை ஆடியிருக்கும் 4 போட்டிகளில் எதிலுமே இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு 200 ரன்களுக்கு மேல் கொடுத்ததில்லை. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கே 187 ரன்களை கொடுத்திருக்கின்றனர். மற்ற மூன்று போட்டிகளிலும் 187 ரன்களை விட குறைவாகவே எதிரணியை சுருட்டியிருக்கின்றனர்.

ராஜ்யவர்தன் ஹங்கரேக்கர், ரவிக்குமார் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கலக்க, விக்கி ஆஸ்ட்வால் இடதுகை சுழற்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக தோற்ற போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டும் 8 விக்கெட்டுகளை இழ்ந்திருந்தனர். எனவே, இந்த அரையிறுதி போட்டியில் விக்கி ஆஸ்ட்வால் மற்றும் அவருடன் சேர்ந்து சில பார்ட் டைமர்களும் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரகுவன்ஷி, கேப்டன் யாஸ் துல் ஆகியோர் வலுவான ஆட்களாக இருப்பார்கள். அதிகம் எதிர்பார்க்கப்படும் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஹர்னூர் சிங் இந்த தொடரில் சொதப்பி வருகிறார். அவரும் இந்தப் போட்டியில் ஜொலிக்கும்பட்சத்தில் பேட்டிங் இன்னும் வலுப்பெறும்.

வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியையும் கேம்பெல், வைலி, மில்லர், கூப்பர் போன்ற மிரட்டலான பேட்டிங் லைன் அப்பையும் ஆஸ்திரேலியா கொண்டிருக்கிறது. இந்த போட்டியை வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும்பட்சத்தில் உலகக்கோப்பையில் மற்றொரு முறை தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.

இந்திய சீனியர் அணி அடுத்தக்கட்ட வீரர்களுக்கான தேடுதலில் இருப்பதால் இந்த உலகக்கோப்பை அணியில் ஜொலிக்கும் வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையவும் வாய்ப்பிருக்கிறது.

Also Read: சீனாவில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்... தனி ஒருவராக களமிறங்கும் ஜம்மு காஷ்மீர் வீரர்!