Sports

“இந்தியாவை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது” : பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் - ஒரு குட்டி ரீவைண்ட்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராஃபியை ஆஸ்திரேலியாவில் வைத்தே இந்தியா வென்றதன் ஒரு வருட நினைவை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் அந்தத் தொடரில் நடந்த முக்கியமான சம்பவங்கள் பற்றிய குட்டி ரீவைண்ட் இங்கே..

*அடிலெய்டில் நடந்த முதல் போட்டி பகலிரவு போட்டியாக நடந்திருந்தது. அதில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை எடுத்து வலுவான நிலையிலேயே இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு மோசமான முறையில் ஆல் அவுட் ஆகியிருந்தது. 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையிலிருந்து 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து (ஷமி காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் ஆகியிருந்தார்.) ஆல் அவுட் ஆகியிருந்தனர். வெறும் 1 மணி நேரத்தில் இந்திய அணி மொத்தமாக ஆஸியிடம் வீழ்ந்திருந்தது.

*அடிலெய்டில் நடந்த அந்த முதல் போட்டியில் ப்ரித்திவி ஷா ஓப்பனிங் இறங்கியிருப்பார். ப்ரித்திவி ஓப்பனிங் ஆடிய போது கமெண்ட்ரி பாக்ஸில் ரிக்கி பாண்டிங் இவர் இப்படித்தான் அவுட் ஆவார் பாருங்கள் என பேசிக்கொண்டிருக்க அவர் பேசி முடிப்பதற்குள்ளேயே ப்ரித்திவி ஷா அவர் சொன்னதைப் போன்றே அவுட் ஆகியிருப்பார். இந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.

*அனுஷ்கா சர்மாவின் பிரசவம் நெருங்கியதால் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியை முடித்துவிட்டு விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். அடுத்த 3 போட்டிகளுக்கும் ரஹானேவே கேப்டனாக செயல்பட்டார்.

*அடிலெய்டில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகிவிட்டு, அடுத்து மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டிற்கு ரஹானே தலைமையில் வந்திருந்தது. இந்த போட்டியில் டாஸை வென்ற ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். முந்தைய இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டு துணிச்சலாக முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

*டாஸை வென்று பேட்டிங் எடுத்ததோடு அல்லாமல் அந்த முதல் இன்னிங்ஸிலேயே கேப்டன் ரஹானே சதமடித்து அசத்தியிருந்தார். ரஹானேவின் கரியரில் லார்ட்ஸில் அவர் அடித்த சதமே மிகச்சிறந்த சதமாக அதுவரை இருந்தது. இந்த மெல்பர்ன் சதம் அந்த லார்ட்ஸ் சதத்தையே மிஞ்சிவிட்டதாக பாராட்டப்பட்டது. இந்த சதத்தின் விளைவாக இந்திய அணியும் அந்தப் போட்டியை வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

*மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது. ஸ்மித்தும் லபுஷேனும் போட்டி போட்டு ஸ்கொக்ர் செய்தனர். இந்திய அணிக்கு 381 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி தடுமாற தொடங்கியது. எப்படியும் ஆஸ்திரேலியாவே வெல்லும் என்ற சூழல் நிலவியது. அந்த இக்கட்டான சமயத்தில்தான் தமிழக வீரரான அஷ்வினும் ஹனுமா விஹாரியும் கூட்டணி போட்டு 3.45 மணி நேரம் க்ரீஸில் நின்று 43 ஓவர்களை எதிர்கொண்டு போட்டியை டிரா செய்தனர்.

*இதை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. அஷ்வின் விஹாரி இருவருமே அந்த இன்னிங்ஸை ஆடிய போது காயமடைந்திருந்தனர். அஷ்வினிற்கு முதுகுப்பதியில் காயம் ஏற்பட அவர் எழக்கூட முடியாமல் அவதிப்பட்டார். ஹனுமா விஹாரி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இத்தோடுதான் இருவரும் 3.45 மணி நேரம் க்ரீஸில் நின்று அணியை காப்பாற்றியிருந்தனர்.

*அஷ்வினும் விஹாரியும் ஒவ்வொரு பந்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முடித்த போதும் ட்ரெஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி சபாஷ்... சபாஷ்... எனக் கூறி கைகளை தட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். ரவிசாஸ்திரி அன்றைக்கு எத்தனை முறை சபாஷ் சொன்னார் என்பதை எண்ணக்கூட முடியவில்லை அத்தனை முறை கூறிவிட்டார் என பயிற்சியாளர் குழுவை சேர்ந்தவர் கூறியிருக்கின்றனர்.

*இந்த சிட்னி டெஸ்ட்டில் அஷ்வின் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் கீப்பருமான டிம் பெய்ன் 'தைரியம் இருந்தா காபாவுக்கு வாங்க' என சவால் விட்டிருந்தார்.

*காபா ஆஸ்திரேலிய அணியின் கோட்டை. 30 ஆண்டுகளுக்கு மேல் ஆஸ்திரேலிய அணி அங்கே தோற்றதே இல்லை.

*அப்படியான காபாவில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி ரொம்பவே இளம் அணியாக இருந்தது. இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், அஷ்வின் என அனுபவ பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.

*தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமாகியிருந்தனர். ஷர்துல் தாகூர் தனது இரண்டாவது போட்டியில் ஆடியிருந்தார். சிராஜ் இந்த தொடரில்தான் அணிக்கு அறிமுகமே ஆகியிருந்தார். இந்தப் போட்டியில் ஆடிய இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாகவே 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தனர். அதேநேரத்தில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 1033 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இதிலிருந்தே இந்திய அணி எவ்வளவு அனுபவமற்ற அணியாக இருந்தது என்பதை உணர முடியும்.

*அனுபவமெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை போல இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பினர். சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், பண்ட், சிராஜ், ஷர்துல் தாகூர் என அனுபவமற்ற வீரர்களே வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக அமைந்தனர். இந்திய அணி 2-1 என இந்த தொடரை வென்று அசத்தியது.

*2018லுமே இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. ஆனால், அந்தத் தொடரில் வார்னர் இல்லை, ஸ்மித் இல்லை இந்தியா வீழ்த்தியது சுமாரான ஆஸ்திரேலிய அணி என அந்த வெற்றி மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், 2021-இல் இந்தியா பெற்ற வெற்றி அப்படியே தலைகீழ். இந்திய அணிதான் அனுபவமற்றதாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி முழுபலத்துடன் நின்றது. அதனால் இந்த வெற்றியே இந்திய அணியின் முழுமையான வெற்றியாக பார்க்கப்பட்டது.

*காபா டெஸ்ட்டை இந்தியா வென்ற பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் '130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவை எப்போதும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது' எனப் பேசியிருந்தார். டிம் பெய்னின் வாய்ச்சவடாலுக்கு ஆஸ்திரேலிய முகாமிலிருந்தே வந்த எதிர்வினையாக இதை பார்க்கலாம்.

*இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய ரஹானேவிற்கு இந்த தொடர் மூலம் பெரும்புகழ் கிடைத்தது. இதுவரை தோல்வியே சந்தித்திடாத இந்திய கேப்டனாக வரலாறு படைத்திருந்தார்.

Also Read: முதல்முறையாக ராகுல் தலைமையில் களம் காணும் இந்திய அணி : பலம் - பலவீனம் என்ன?