Sports
INDvsSA : 3 டெஸ்ட் தொடரிலும் சதமடித்த விக்கெட் கீப்பர்; பொறுமையாக இருந்தும் பலன் தராத கோலியின் ஆட்டம் !
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி சதமடித்தார் இந்திய விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட். இந்திய அணி 198 ரன்கள் ஆல் அவுட் ஆனாலும், ஒரு பக்கம் தனியாகப் போராடிய பன்ட், 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்ற நிலையிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்திய அணி. மூன்றாம் நாள் தொடக்கமே அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இரண்டாவது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார் சடேஷ்வர் புஜாரா. மிகவும் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே, வெறும் ஒரே ரன்னில் வெளியேறினார். ரபாடா வீசிய அதி அற்புதமான பந்தில் எல்கரிடம் கேட்ச் கொடுத்தார் ரஹானே.
அடுத்து உள்ளே வந்தார் ரிசப் பன்ட். முதலிரண்டு போட்டிகளில் மிகவும் மோசமாக விளாயாடியதால் பல விமர்சனங்களைச் சந்தித்திருந்தார். அவரது ஷாட் செலக்ஷன் கேள்விக்குள்ளானது. அதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இந்த இன்னிங்ஸில் விளையாடினார் அவர். தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தைக் கைவிடவில்லை. அதேசமயம் மோசமான ஷாட்களையும் எதையும் ஆடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கியர்களை மாற்றி நன்றாக ஸ்கோர் செய்ய ஆரம்பித்தார்.
இன்னொரு பக்கம் கேப்டன் கோலியோ உச்சபட்ச பொறுமையோடு விளையாடிக் கொண்டிருந்தார். ஐந்தாவது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே செல்லும் பந்துகளை தொடாமலயே விட்டுக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில்தான் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே 100 பந்துகளுக்கு மேல் சந்தித்திருக்கிறார் விராட். ஆனால், அவர் அவ்வளவு பொறுமையாக ஆடியது பெரிய பலன் கொடுக்கவில்லை. ஒரேயொரு பந்தை அவர் மோசமாகி ஆட, அவர் விக்கெட் வீழ்ந்தது. 143 பந்துகளைச் சந்தித்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்த வந்த அஷ்வின், ஷர்துல் தாக்கூர் என ஒவ்வொரு வீரரும் வருவதும் போவதுமாகவே இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் 7 ரன்களிலும், ஷர்துல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், பன்ட் தன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் டக் அவுட் ஆக, 189 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பன்ட் சதமடிப்பாரா என்பதே கேள்விக்குறியானது. ஆனால், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தன் நான்காவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் அவர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என 3 நாடுகளிலும் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் இவர்தான். பும்ரா 2 ரன்களில் அவுட்டாக, இந்தியா 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 212 ரன்களை தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !