Sports

5 போட்டிகளில் 4 சதம்... இந்திய அணியின் இரும்புக்கதவை தட்டித் திறக்கும் ருத்துராஜ் கெய்க்வாட்!

ருத்துராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்காக கிரிக்கெட் ஆடி வருகிறார். மகாராஷ்டிரா அணியின் கேப்டனே அவர்தான். இப்போது நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்து அசரடித்திருக்கிறார். இதன்மூலம் அவர் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி பிரபலமானவர். சமீபத்தில் நடந்து முடிந்த 2021 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணிக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மிக முக்கிய காரணமே ருத்துராஜ் கெய்க்வாட்தான்.

ஐ.பி.எல்-லில் மட்டும் சிறப்பாக ஆடினால் போதுமா? அதை மட்டும் வைத்தே இந்திய அணியில் அவரை தேர்ந்தெடுப்பது அபத்தமான விஷயம் என விமர்சிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் உள்ளூர் தொடர்கள் தொடங்கின. முதலில் சையத் முஷ்தாக் அலி டி20 தொடர் ஆரம்பித்தது. இதில், மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாகவும் ஓப்பனராகவும் ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தார். ஒரு போட்டியில் 44 ரன்களை எடுத்திருந்தார். ஒரு போட்டியில் மட்டுமே சொதப்பலாக 3 ரன்களை எடுத்திருந்தார். ஒட்டுமொத்தமாக 5 போட்டிகளில் 4 போட்டிகளில் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார்.

இந்த டி20 தொடர் முடிந்த பிறகு விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தனது உச்சபட்ச ஃபார்மை ருத்துராஜ் வெளிக்காட்டியிருக்கிறார். இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள ருத்துராஜ் 603 ரன்களை எடுத்திருக்கிறார். 5 போட்டிகளில் நான்கில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மத்திய பிரதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் 112 பந்துகளில் 136 ரன்களையும் சத்தீஸ்கருக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 143 பந்துகளில் 154 ரன்களையும் எடுத்திருந்தார். கேரளாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் 129 பந்துகளில் 124 ரன்களை எடுத்து ஹாட்ரிக் சதமடித்தார். உத்தரகாண்ட்டுக்கு எதிரான நான்காவது போட்டியில் 21 ரன்களை மட்டுமே எடுத்தவர், இன்று மீண்டும் சண்டிகருக்கு எதிரான போட்டியில் 168 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார்.

ஐ.பி.எல், சையத் முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே என அடுத்தடுத்த மூன்று தொடர்களிலும் மிகமிகச் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருக்கிறார். இதனால், வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய ODI அணிக்கு ருத்துராஜ் தேர்ந்தெடுக்கப்படுவார் என உறுதியாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் புதிய லிமிட்டெட் ஓவர் கேப்டனான ரோஹித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒருநாள் தொடரில் ஆடுவாரா என்பது சந்தேகமே. ஒருவேளை ரோஹித் ஆடாவிடில் அவருடைய ஓப்பனிங் ஸ்லாட்டில் ருத்துராஜ் இறக்கப்படுவார். ரோஹித் ஆடும்பட்சத்திலும் ருத்துராஜுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் ஆடப்போவதில்லை என கோலி பிசிசிஐயிடம் சொல்லியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோலி ஆடவில்லை எனில் அவரின் நம்பர் 3 ஸ்லாட்டில் ருத்துராஜ் இறக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்திய அணியின் இரும்புக்கதவை உடைத்து நொறுக்கி ருத்துராஜ் அணிக்கு தேர்வாக இருக்கிறார். தென்னாப்பிரிக்க தொடரிலும் உள்ளூர் போட்டிகளில் வெளிக்காட்டிய அதே ஃபார்மோடு ஆடி தனக்கான நிலையான இடத்தை அணிக்குள் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Also Read: Shame on BCCI : 'கேப்டன்' கோலி நீக்கமும் கங்குலியின் விளக்கமும்.. ரசிகர்களின் எதிர்வினையும்!