Sports

“தங்க மகனுக்கு உயர்தர உணவை கூட மோடி அரசு ஏற்பாடு செய்யவில்லை” : நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் ஆதங்கம்!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் 120 ஆண்டுகால கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா.

இவர் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கத்தை வென்றது, டோக்கியோவில் தங்கம் வென்ற முதல் வீரர், 2008ம் ஆண்டிற்குப் பிறகு தனிப்பிரிவில் தங்கம் வென்ற வீரர் என தனது ஈட்டியால் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் ஒரே தங்கத்தில் இந்திய வரலாற்றுக்கு புதிய சரித்திரத்தையும் எழுதியுள்ளார்.

இவரின் இந்த புதிய வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்தியாவே இவரின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான். இவர் 1984ல் 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனையை இது வரையாரும் முறியடித்ததில்லை. இவர் தான் நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக உள்ளார்.

இவர் தான் கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது இந்திய விளையாட்டுத்துறை மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, உவே ஹான், “இந்திய விளையாட்டு ஆணையம் (SAI),தடகள சம்மேளனம் (AFI) தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை.

ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. மேலும், விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர்.

மேலும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆசிய மற்றும் மாமன்வெல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவரை JSW நிறுவனமே ஸ்பான்சர் (Sponsor) அளித்து உதவியது. இவரின் வெற்றி மட்டுமே இவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நான் பயிற்சியாளராக வந்தபோது என்னால் ஏதாவது மாற்ற முடியும் என நினைத்தேன். ஆனால் விளையாட்டு குறித்து அரசின் செயல்பாடுகளைப் பார்த்த போது அது மிகவும் கடினம் என தெரிந்து கொண்டேன்” என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்திய விளையாட்டுத்துறை மீது இவர் வைத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியாவின் விளையாட்டுத்துறை லட்சணம் இவ்வாறு இருக்க, பிரதமர் மோடியால் எப்படி வெற்றி பெற்ற வீரர்களிடம் தொலைப்பேசியில் பேச முடிகிறது?, வாழ்த்து தெரிவிக்க முடிகிறது..? என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read: “இந்தியாவின் தங்க மகன்” : ஈட்டியால் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்த நீரஜ் சோப்ரா!