Sports
ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் முதலிடம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று அதிகாலை தடகளத்தில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் சிவ்பால் சிங்கும் கலந்துக்கொண்டனர். நீரஜ் சோப்ரா மிகச்சிறப்பாக செயல்பட்டு தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். இந்தியாவிற்கு இன்னொரு பதக்க நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார்.
ஈட்டி எறிதலில் ஒரு வீரருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில், நிர்ணயிக்கப்பட்ட 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீச வேண்டும். அப்படி வீசுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். பல வீரர்களும் மூன்று வாய்ப்பில் பல முறை ஃபவுல் வாங்கினர். ஜெர்மனியை சேர்ந்த உலக சாம்பியன் ஜோனஸ் வெட்டர். அவரே மூன்று வாய்ப்புகளையும் வீசியிருந்தார். அதில் கடைசி வாய்ப்பில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டினார். 85.64 மீட்டருக்கு அவர் வீசியிருந்தார்.
நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ். ஆனால், முதல் வீச்சிலேயே நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டிவிட்டார். 86.65 மீட்டருக்கு அவர் ஈட்டியை வீசினார். ஒரே வாய்ப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டார். உலக சாம்பியனையெல்லாம் மிஞ்சி தகுதசுற்றில் முதலிடமும் பிடித்துவிட்டார். இன்னொரு இந்திய வீரரான சிவ்பால் சிங் 76.40 மீட்டர் மட்டுமே வீசி தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.
நீரஜ் சோப்ரா ஹரியானாவை சேர்ந்தவர். 2017, 2018 காலகட்டங்களில் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தார். அப்போதே இவர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பார் என முடிவாகிவிட்டது.
அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தடகள போட்டிகளில் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. அந்த ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தீர்த்து வைப்பார் என பெரிதாக நம்பப்படுகிறது. 85 மீட்டருக்கு மேல் எப்போதும் சீராக வீசக்கூடிய திறன் உடையவர். மேலும், தகுதிச்சுற்றில் கலந்துக்கொண்ட 32 வீரர்களில் அதிக தூரம் வீசியிருப்பதும் நீரஜ்தான் என்பதால் இந்திய ரசிகர்களின் பதக்க எதிர்பார்ப்பு வீண் போகாது என்றே நம்பப்படுகிறது. நீரஜ் சோப்ரா பங்குபெறும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறுகிறது.
-உ.ஸ்ரீ
Also Read
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”