Sports
போராடித் தோற்ற பி.வி.சிந்து... நாளைய ஆட்டத்தில் மகத்தான சாதனையை நிகழ்த்துவாரா? #Olympics
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவிற்கும் சீன தைபே வீராங்கனையான தாய்-சூ-யிங் க்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பி.வி.சிந்து நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இதுவரை ஆடியிருந்த அத்தனை போட்டிகளிலும் வென்றிருந்தார்.
மேலும், அத்தனை போட்டியிலுமே ஒரு செட்டை கூட அவர் தோற்றிருக்கவில்லை. காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையான யமகுச்சிக்கு எதிராகவும் சிறப்பாக போராடி வென்றிருந்தார். இதனால் சிந்து மீது மிகப்பெரிய நம்பிக்கை உருவாகியிருந்தது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் கரோலினா மரினுடன் இறுதிப்போட்டியில் தோற்று, வெள்ளிப்பதக்கமே வென்றிருந்தார்.
இந்த முறை முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்ததால் உறுதியாக தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையிலேயே சீன தைபேவை சேர்ந்த தாய்-சூ-யிங் குடன் அரையிறுதி போட்டி தொடங்கியது. தாய்-சூ-யிங் உலகின் நம்பர் 1 வீராங்கனை. மேலும், சிந்துவுக்கு எதிராக 18 போட்டிகளில் வென்றிருக்கிறார். பதிலுக்கு சிந்து 5 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தார். கடைசி மூன்று போட்டிகளிலுமே தோற்றிருந்தார். இப்படி ரெக்கார்டுகள் அனைத்துமே சிந்துவுக்கு எதிராகத்தான் இருந்தது. போட்டியும் ரெக்கார்டுகளின்படியே தாய்-சூ-யிங் பக்கமே இருந்தது.
முதல் செட்டின் முதல் புள்ளியையே ஒரு வலுவான ஸ்மாஷோடு வென்றார் தாய்-சூ-யிங். ஆனால், சிந்துவும் விட்டுவிடாமல் போட்டி போட்டு புள்ளிகளை தொடர்ந்து எடுத்தார். யாருமே பெரிய லீட் எதுவும் எடுக்கவில்லை. ஒரு புள்ளி வித்தியாசத்திலேயே இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். சிந்து இன்-அவுட்டில் கச்சிதமாக சில புள்ளிகளை எடுத்தார். தாய்-சூ-யிங் லாவகமான க்ராஸ் கோர்ட் ட்ராப்கள் ஆடி புள்ளிகளை குவித்தார். சிந்துவை ஒரு பக்கம் கமிட் ஆக வைத்து தன்னுடைய பேக் ஹேண்ட் திறன் மூலம் மறுபக்கத்தில் ஸ்ட்ரோக் செய்தும் புள்ளிகளை எடுத்தார். முதல் செட் நெருக்கமாக சென்று 21-18 என தாய்-சூ-யிங் வென்றார்.
இரண்டாவது செட்டின் முதல் புள்ளியுமே தாய்-சூ-யிங் க்குக்கே சென்றது. ஆனால், சிந்து அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. தொடர் அக்ரஸிவ் ஸ்மாஷ்கள் மூலம் முதல் புள்ளியை வென்றார். சிந்துவின் இந்த மாதிரியான அக்ரஸிவ் ஸ்மாஷ்களுக்கே தாய்-சூ-யிங் திணறினார். ஆனால், இதையே தொடர்ந்து முயற்சித்தது சிந்துவுக்கு பின்னடைவாகவும் அமைந்தது. 7-7 என்றிருந்த நிலையில் ஸ்மாஷ்கள் மூலம் அவரை வீழ்த்த தொடர்ந்து முயன்றார். ஆனால், எந்த ஸ்மாஷும் ஸ்ட்ரோக்கும் சரியான கட்டுப்பாட்டோடு அடிக்கப்படவில்லை. தொடர்ந்து 5 முறை லைனுக்கு வெளியே அடித்து 5 புள்ளிகளை அப்படியே தூக்கிக் கொடுத்தார்.
இதனால் 12-7 என பெரிய லீடுக்கு சென்றார் தாய்-சூ-யிங். இந்த லீடை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய லாவகமான ட்ராப்கள் மூலம் புள்ளிகளை பெற்று 21-12 என இரண்டாவது செட்டையும் வென்று போட்டியையும் வென்றார் தாய்-சூ-யிங். நான்கு போட்டிகளாக ஒரு செட்டையும் இழக்காத சிந்து இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையுமே இழந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இழந்தார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதில் சீன வீராங்கனையுடன் மோதவிருக்கிறார். இந்தப் பதக்கத்தை வெல்லும்பட்சத்தில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை பெறுவார்.
-உ.ஸ்ரீ
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!