Sports

முடிவுக்கு வருகிறதா ‘தல’ தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை? - ஹர்பஜன் சிங் சூசகம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஒதுங்கியுள்ளார். அதன் பின்னர் இந்திய அணி விளையாடிய எந்தத் தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.

இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பிலோ, தோனி தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பி.சி.சி.ஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாததற்கு பா.ஜ.க தான் காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்காக தோனி மீண்டும் விளையாட மாட்டார் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பி.சி.சி.ஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. நான் கேள்விப்பட்ட வரையில் உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும். இந்தியாவுக்காக அவர் மீண்டும் விளையாட மாட்டார்.

இதற்கான மனநிலையை நீண்ட நாட்களுக்கு முன்பே அவர் தயார்படுத்திக் கொண்டார். தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் அவர் மீண்டும் இந்தியாவுக்காக அவர் விளையாடமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பா.ஜ.க-வுக்கு பிரசாரம் செய்யாததால் பழி வாங்கப்படுகிறாரா தோனி?