Sports

3 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்: ஆஸி.காட்டுத்தீக்கு பரிசுத்தொகையை நிவாரணமாக அளித்த செரீனா வில்லியம்ஸ்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னோட்டமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் கிளாசிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை ஜெசிகா பெகுலா (Jessica Pegula) உடன் விளையாடினார். ஆண்டின் முதல் தொடர் என்பதால் இருவரும் வெற்றியுடன் தொடங்க மும்முரம் காட்டினர்.

தனது அனுபவ ஆட்டத்தை காட்டிய செரினா 6க்கு3, 6க்கு4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். அதோடு, 2020ம் ஆண்டின் முதலில் நடந்த சர்வதேச தொடரிலும் வாகை சூடினார்.

இதன்மூலம், கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு செரினா வென்ற முதல் பட்டம் இது என்பதுடன், தாயான பின் பெற்ற முதல் பட்டம் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் செரினா வென்ற 73வது பட்டம் இதுவாகும். 280 சர்வதேச தரப்புள்ளிகள், கோப்பை மற்றும் அமெரிக்க மதிப்பில் 43,000 டாலரும் சாம்பியன் செரினாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது.

தனக்கு கிடைத்த இந்த பரிசுத்தொகையை ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்குவதாக செரினா தெரிவித்துள்ளார்.