Sports

கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவது ஆரோக்கியமான செய்தி அல்ல - சச்சின் டெண்டுல்கர் வேதனை!

நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும், தரமான ஆடுகளங்களும் இல்லாதது கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதை காட்டுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ''அணைத்து மக்களும் ரசித்த கிரிக்கெட் போட்டிகள் இன்று இல்லை. ஏனெனில், உலகத்தரம் வாய்ந்த ஒருசில வேகப்பந்துவீச்சாளர்கள் தான் உள்ளார்கள். நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும், தரமான ஆடுகளங்களும் இல்லாதது கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவதை காட்டுகிறது.

கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரோக்கியமான செய்தி அல்ல. கிரிக்கெட்டின் தரம் உயரவேண்டியது அவசியம். கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வேர்கள் என்பது ஆடுகளங்கள் தான்.

ஒவ்வொரு போட்டிக்கும் ஆடுகளங்களை வழங்கும் போது வெகபந்துவீச்சுக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் சம அளவு பயன்பட வேண்டும். அதேபோல, ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கும் சம அளவில் உதவ வேண்டும். இந்த நடுநிலைத்தன்மை தவறும் பட்சத்தில் போட்டி பலவீனமடையும், மக்களின் ஈர்ப்பை பெற தவறிவிடும்.

நான் பார்த்தவரையில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் கோப்பைக்கான ஆடுகளங்கள் மிக சிறப்பாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் போட்டித்தன்மை இருக்கிறதா என்றால், இந்தியா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே தான் போட்டித்தன்மை உள்ளது.

ஐ.பி.எல்-லில் யாராவது சிறப்பாக செயல்பட்டிருந்தால், அவர் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது முற்றிலும் நியாயமானது.

ஆனால் யாராவது ஐ.பி.எல்.லில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படுவதை ஏற்க முடியாது. இதில் ஜஸ்பிரித் பும்ராவைப் போன்ற ஒரு சில வீரர்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்'' இவ்வாறுத் தெரிவித்தார்.

மேலும், ''1991ம் ஆண்டு பெர்த்தில் நான் அடித்த சதத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. என் வாழ்வில் மறக்க முடியாது. சென்னையில் 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதுகு வலியோடு நான் அடித்த சதம், 2004ம் ஆண்டில் சிட்னியில் அடித்த இரட்டை சதம், 2011ம் ஆண்டு கேப்டவுனில் டேல் ஸ்டெயினுக்கு பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடியது சவால் நிறைந்தது'' எனத் தெரிவித்தார்.