Sports

“எல்லோரையும் போல் எனக்கும் கோபம் வரும்” : ‘கேப்டன் கூல்’ பதிலால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான பெயர் மகேந்திர சிங் தோனி. T20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, டெஸ்ட் அணிகளில் முதலிடம் என இந்திய அணியை சிறப்பாக செயல்பட வைத்து இந்திய அணி உச்சிக்கு செல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்.

எவ்வளவு கடினமான சூழலையும் நிதானமாகக் கையாளும் தோனியை ரசிகர்கள் ''கேப்டன் கூல்'' என்று செல்லமாக அழைப்பதுண்டு. இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில், எல்லோரையும் போல் எனக்கும் கோபம் வரும். ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் என தோனி கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் களத்தில் வீரர்கள் தங்களது உணர்வுகளை எப்படி கட்டுப்படுவத்துவது என்று உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி உங்களால் இதுபோன்று செயல்பட முடிகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தோனி, ''எல்லோரையும் போல களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அது அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும். நானும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன்.

ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானது இல்லை. உணர்ச்சிகளை விடவும் பிரச்னைக்கான தீர்வைத் தேடுவது தான் முக்கியமானது. எனது உணர்ச்சிகளை மற்ற நபர்களை விட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.